கோட்டையூரிலிருந்து வெளிவரும் “சண்டமாருதம்” என்னும் தமிழ் வாரப்பத்திரிகையின் முதல் இதழ் வரப்பெற்றோம். இது சுயமரியாதைத் தொண்டர் பூவாளூர் அ.பொன்னம்பலனார் அவர்களால் எழுதப்பட்டு வெளியிடுவதாகும். இதன் கொள்கை அதன் பெயருக்கேற்ப சுயமரியாதைக் கொள்கைக்கு எதிரான எதையும் சிறிதும் அஞ்சாமல் எதிர்த்து அடிப்பதேயாகும். அதன் ஆசிரியரான திரு. அ. பொன்னலம்பனாரைப்பற்றி நாம் சுயமரியாதை உலகத்திற்கு அதிகம் எடுத்துச் சொல்ல வேண்டியதில்லை. அவர் முதலில் ஒரு பெரிய சைவசித்தாந்த அழுக்கு மூட்டையாய் இருந்தவர். என்னேரமும் அடிக்கடி விபூதி பூசிக்கொண்டு ருத்திராக்ஷ மாலை பூண்டு தேவார திருவாசக. ராமலிங்கசாமி முதலாகிய பாடல்களை கண்களில் நீர் ஒழுகத் தேம்பித்தேம்பி அழுதுகொண்டு இசையோடு பாடிப்பாடி, செவப் பிரசாரம் செய்தவர் - பூவாழுர் சைவசித்தாந்த கழகத்தின் முக்கிய பண்டிதர்களில் ஒருவராய் இருந்தவர். அப்படிப் பட்டவர் சுயமரியாதையில் திரும்பி ”சண்டமாருதம்" போல் எதிரிகளைத் தாக்கி சுயமரியாதையைப் பரப்ப ஆசை கொண்டே "சண்டமாருதம்" என்ற பத்திரிகையின் ஆசிரியராயிருக்கிறார். ஆகவே தமிழ் மக்கள், சிறப்பாக சுயமரியாதையில் கவலையுள்ள மக்கள் யாவரும் அதற்கு சந்தாதாரராய்ச் சேர்ந்து ஆதரிக்க வேண்டியது கடமை யாகும்.
அதன் வருட சந்தா ரூ.3-0-0
வெளிநாட்டுக்கு ரூ. 4-0-
விலாசம் :- "சண்டமாருதம்” ஆபீஸ்,
கோட்டையூர், ராமநாதபுரம் ஜில்லா.
குடி அரசு - மதிப்புரை - 04.01.1931